தமிழக செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் பலியான 16 போலீசார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - சட்டசபையில் காங்கிரஸ் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தில் பலியான 16 போலீசார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி (விளவங்கோடு) பேசும்போது நடந்த விவாதம் வருமாறு:-

விஜயதரணி:- தமிழகத்தில் நிலவும் வருவாய் பற்றாக்குறை சீரமைக்கப்பட வேண்டும். நிலம், கட்டிடம் ஆகியவற்றின் விலை அதிகமாக இருப்பதால் உற்பத்தி தொழில்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியதுள்ளது. தமிழகத்தில் குறைந்த செலவில் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளை அரசு செய்துதர வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதிப்பகிர்வு மோசமாக உள்ளது. வளர்ச்சி பெற்ற மாநிலமான தமிழகம், அந்த நிதியைப் பெற போராட வேண்டியதுள்ளது. எனவே இதுபோன்ற நிதியை மத்திய அரசு விரைந்து தருவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறோம். டெல்லி சென்று சந்திக்கும்போது நேரடியாகவும் வலியுறுத்தி இருக்கிறோம்.

விஜயதரணி:- பெண்கள், குழந்தைகள் நலனுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லும் பெண்களுக்காக அமைக்க இருக்கும் விடுதிகளில் ஒன்றை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.

பேருந்துகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது போல, பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், தனிமையாக உள்ள பகுதிகளிலும் பொருத்த வேண்டும். பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை.

அமைச்சர் டாக்டர் சரோஜா:- தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையும், சமூகநலத் துறையும் இணைந்து செயல்படுகின்றன. குற்றங்களை குறைப்பதற்கான செல்போன் செயலி, இலவச எண்களை உருவாக்குவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

விஜயதரணி:- தமிழகத்தில் பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 8 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக உயர்ந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறியிருக்கிறார். ஆனால் அதில் தமிழக அரசு கூறியிருக்கும் தகவல் வேறாக உள்ளது. இதில் எது உண்மை?

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- மத்திய மந்திரி கொடுத்துள்ள புள்ளிவிபரங் கள் எதனடிப்படையில் தரப்பட்டன என்று மத்திய அரசிடம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். இதுவரை பதில் வரவில்லை. தமிழக அரசு அளிக்கும் தகவலே சரியானது.

விஜயதரணி:- தமிழகத்தில் 65 சதவீத பிரசவம் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுகிறது. சிசேரியனை தவிர்த்து முடிந்த அளவில் சுகப்பிரசவத்துக்கு அரசு டாக்டர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ளதுபோல வலியில்லாத பிரசவங்களுக்கான வழிவகைகளை செய்துதர வேண்டும்.

மத்திய அரசின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை சில வகை நோய்கள் சேர்க்கப்படவில்லை. பெரிய சிகிச்சைகளையும் அதில் இணைக்க வேண்டும்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:- புதிய நோய்களையும் காப்பீட்டில் சேர்க்க அரசு தயாராக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு யோகா போன்ற பயிற்சிகளை இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் வழங்கி வருகிறது. வலியில்லாத பிரசவத்துக்கு அதுவும் உதவியாக இருக்கும்.

விஜயதரணி:- ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது 16 போலீசார் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதில் என் தாயாரும் ஒருவர். ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாகவும், தற்போது சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை சட்டம் முடிவு செய்யட்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

அந்த 7 பேரின் விடுதலையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. விடுதலை ஆகும் பட்சத்தில் அதற்கு முன்பாக அந்த 16 போலீசாரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு, அரசு வேலை என்று எதாவது ஒரு இழப்பீட்டை அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு (அ.தி.மு.க.), பத்திரிகையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பத்திரிகையாளர் நலவாரியத்தை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை