சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஒரு வார காலமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பெரும்பகுதியான மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. வாழை, உளுந்து, பாசிப்பயிறு, வேர்க்கடலை உள்ளிட்ட பல வகையான பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அறுவடை எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு வழியில்லாமல் மொத்தத்தில் சுமார் 8 லட்சம் ஏக்கர் நிலங்களில் சாகுபடிகள் முழுமையாக அழிந்துவிட்டன.
எனவே, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும், இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதால் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.