சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும் தகுந்த விளைச்சல் நிலங்களாக மாற்றிட நீர்ப்பிரிமுகடு மேலாண்மை (Micro Watershed Management) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்துவதோடு, இவ்வகை நிலங்களில் சிறுதானிய வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவோம் என வாக்குறுதி எண் 71-ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா?
கடந்த நான்கரை ஆண்டுகளில் எத்தனை ஏக்கர் தரிசு நிலங்களை விளைச்சலுக்கு ஏற்றவாறு தரம் உயர்த்தியுள்ளீர்கள் என்பதையும், எத்தனை சிறுதானிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளீர்கள் என்பதையும் உங்களால் பட்டியலிட முடியுமா? திமுக ஆட்சியில் பெருகி வரும் ரியல் எஸ்டேட் மோகத்தால் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், புஞ்சை நிலங்கள் ஆகியவை கட்டிடக்குவியலாக மாறிவருவதை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம். திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் வாழ்விழந்து நிற்பதையும், விவசாயம் வலுவிழந்து கிடப்பதையும் தினந்தோறும் வருத்தத்துடன் உங்களுக்கு எடுத்துக் கூறி வருகிறோம்.
ஆனால், நீங்களோ கொஞ்சம் கூட உறுத்தாமல் பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு பந்தாவாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறீர்கள். அத்தனையையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் முதல்-அமைச்சரே! உண்டி கொடுத்தோரை உதறித்தள்ளிய உங்கள் நம்பிக்கை துரோகத்தைத் தமிழக விவசாயிகள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.