சென்னை,
அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித்துறை அமைச்சராக செயல்பட்டவர் கே.சி.வீரமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பெயரில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது. அதில், 5 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்த்துள்ளதாகவும், 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை கே.சி. வீரமணி 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து வாங்கியுள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனை உள்நோக்கம் கொண்டது என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சோதனை நடப்பதில் உள்நோக்கம் உள்ளது.
* அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக் கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்படுகிறது.
* லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசைதிருப்ப தி.மு.க. அரசு சோதனை நடத்துகிறது
என்றார்.