தமிழக செய்திகள்

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து 12-ம் வகுப்புக்கு தேர்வு ஒத்திவைப்பு

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நடைபெறுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி, கல்வித்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடந்து வந்தன. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதற்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டன.

அந்தவகையில் நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 7-ந் தேதி வரையிலும், அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்வுக்கான நாட்கள் நெருங்கி வரும் இந்த நிலையில், மாணவர்களும் அதற்கு ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். தேர்வுக்கான பணிகளில் சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த ஆண்டில் உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட இந்த முறை அதிகளவில் உயர்ந்து கொண்டே வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்தது. இதேபோல், காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியும் கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேரடியாக இதில் தலையிட்டு, தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மேலும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியாவும் அதிகளவில் கொரோனா பரவி வரும் இந்த நேரத்தில் தேர்வை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசை வலியுறுத்தினர். சிவசேனா தரப்பில் கல்வித்துறை அமைச்சகத்துக்கு நேரடியாக கடிதமும் எழுதப்பட்டது. அதில், சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வை மாற்றி வேறொரு நாளில் வைக்கலாம் என்று தெரிவித்து இருந்தனர்.

இதுதவிர, சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஆன்லைன் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர். மேலும், தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் டிரென்டிங் ஆனது.

இந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று அவசரமாக நடந்தது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர், பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாணவர்களின் நலனே அரசின் முதன்மை முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். தற்போது பல மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் இருக்கிறது. சில மாநிலங்களில் அதன் பரவல் அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் 11 மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு, மாநில வாரியத்தை போல் அல்ல. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்துவது அவசியம். எனவே மாணவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், கல்வி நலனை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இதுதொடர்பாக வருகிற ஜூன் 1-ந் தேதி நிலைமையை சி.பி.எஸ்.இ. ஆய்வு செய்யும். தேர்வுகள் நடைபெறுவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பு அது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

அதேபோல், அடுத்த மாதம் 4-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தால் உருவாக்கப்பட உள்ள வழிமுறையின் அடிப்படையில் அதற்கான தேர்வு முடிவுகள் தீர்மானிக்கப்படும். மாணவர்கள் யாராவது தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி அடையாவிட்டால், நிலைமை சீரடைந்த பிறகு, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வை பொறுத்தவரையில் 10-ம் வகுப்பு தேர்வை 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும், 12-ம் வகுப்பு தேர்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளும் என மொத்தம் சுமார் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்தவரையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 1 லட்சம் மாணவ-மாணவிகளும், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை மாணவ-மாணவிகளும் எழுத இருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்