சென்னை,
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலும் தன்னுடைய கோர முகத்தை காட்டுகிறது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. அந்த வகையில் கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.
அதன்படி, நாளை மறுதினம் வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இயல்பை விட, 6 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர். அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இளநீர், மோர், தர்பூசணி அதிக அளவில் விற்பனையாகிறது. ரோட்டோரங்களிலும் தற்காலிக ஜூஸ், கூழ், சோற்று கற்றாழை- மோர் ஜூஸ் கடைகள் அதிக அளவில் வந்துள்ளன.