தமிழக செய்திகள்

பழனி கிரிவீதியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

பழனி கிரிவீதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கேவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் திருஆவினன்குடியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவீதிகளை வலம் வந்த பின்னரே மலைக்கோவில் செல்கின்றனர். கோவிலில் தரிசனம் செய்த பின்பு கிரிவீதிகளில் விற்கப்படும் பேன்சி பொருட்கள் மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றை வாங்கி செல்கின்றனர். இதனால் சன்னதிவீதி, கிரிவீதிகளில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அடிவார பகுதியில் அவ்வப்போது சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறுகிறது. குறிப்பாக திருவிழா காலத்தையொட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறும். அதன்படி பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வருகை தருவார்கள். இதனால் வரும் நாட்களில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆக்கிரமிப்பால் அவதி

இந்நிலையில் பழனி கிரிவீதிகளில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு கிரிவீதியில் பாதையின் நடுவில் தள்ளுவண்டிகளை அமைத்தும், தரையில் வைத்தும் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இது பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக கூட்டம் அதிகமுள்ள நேரத்தில் நடந்து செல்லவே பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

பழனி கோவில் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால் அது உரிய முறையில் நடைபெறாததால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.