தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் சுதந்திரதின விழா கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறியதாவது:-
தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி தென்காசி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வைத்து நடைபெறுகிறது. விழாவின் போது தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி கிடையாது. காவல்துறை மரியாதை தொடர்பான பயிற்சிகளை காவல்துறை செய்திட வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் தயாரிக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
வரும் 15ம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடிட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சரவணன், தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார், தென்காசி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.