புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய பொருளாதாரத்தின் நிலை குறித்து பிரபல பொருளாதார நிபுணரும், நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத்தலைவரும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியரான அரவிந்த் பனகரியா கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தூண்டப்பட்ட இடையூறுகளில் இருந்து இந்திய பொருளாதாரம் சிறப்பாக மீண்டுள்ளது. இந்த மீட்பு நீடித்து 7 முதல் 8 சதவீத வளர்ச்சி விகிதம் மீட்டெடுக்கப்படும். 2022-23 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையை அரை முதல் ஒரு சதவீத அளவுக்கு மத்திய அரசு குறைக்க வேண்டும்.
இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலைமைக்கு திரும்பி உள்ளது. தனியார் நுகர்வு மட்டும், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு கீழே உள்ளது.
தற்போது வைரஸ் அல்லது தடுப்பசியின் பல்வேறு மாறுபாடுகளால் கடந்த கால நோய்த்தொற்றுகள் காரணமாக மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தற்போது நோய் எதிர்ப்பு பொருளை பெற்றிருக்கின்றனர்; இதனால் தொற்று நோய் உள்ளூர் கட்டத்தில் நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்பது தொற்றுநோயியல் நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ள கருத்து ஆகும். இது உண்மையாக நடந்தால் பொருளாதார மீட்பு நிலைத்திருக்கும். 7 முதல் 8 சதவீத வளர்ச்சி சாத்தியப்படும்.
அடுத்த தலைமுறையின் மீது பெரிய கடன்சுமை வரும் என்பதால் நாம் நம் சக்திக்கு மீறி வாழக்கூடாது.
பணவீக்கத்தை ஆராய்ந்தால், அமெரிக்காவில் பண வீக்கம் கவலைக்குரியதாக உள்ளது. அங்கு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் பண வீக்கம் 7 சதவீதத்தை எட்டி உள்ளது. ஆனால் இந்தியாவில் பண வீக்கம் 2 முதல் 6 சதவீதம் வரையில் என்ற இலக்கு வரம்புக்குள் உள்ளது என்று அவர் கூறினார்.