சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு டாக்டர்கள் மற்றும் அவரின் உதவியாளர்கள், உறவினர் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் தனி செயலாளராக இருந்த வெங்கட் ரமணன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று காலையில் ஆஜராகி நீதிபதி ஆறுமுக சாமி கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தீர்களா? அவர் முதல்வராக இருந்த போது சிகிச்சைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் பதில் அளித்தார்.அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை ஆணையத்தில் ஆஜரான பின், ஜெயலலிதாவின் தனிச்செயலராக இருந்த வெங்கட்ரமணன் பேட்டி அளித்தார் அப்போது ஆணையம் முன் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என சொல்லியிருக்கிறார்கள்; கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். என கூறினார்.