தமிழக செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொது கணக்கு குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், பூண்டி கலைவாணன், அருண்குமார், ஒய்.பிரகாஷ் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இந்த குழுவினர் கலெக்டர் சாந்தி, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், சார்பு செயலாளர் பால சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த பொது கணக்கு குழுவினர் ஒகேனக்கல்லில் மீன்வளத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மீன் பண்ணை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப்பண்ணை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் பிரதான சமநிலை நீர்தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, பென்னாகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலும் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.

சர்க்கரை ஆலை

பின்னர் பாப்பாரப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம், பாலக்கோட்டில் சர்க்கரைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை, தர்மபுரி வட்டம் கடகத்தூரில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவியர் விடுதி ஆகியவற்றிலும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அங்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், குழுவினர் விளக்கம் கேட்டனர்.

அரசுக்கு இழப்பு

இதையடுத்து தர்மபுரியில் சட்ட பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில், போக்குவரத்துத்துறை, மீன்வளத்துறை, அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 42 பணிகள் தாமதமாக மேற்கொண்டது தெரியவந்ததுள்ளது. இதேபோல, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முந்தைய ஆட்சியின் போது, கரும்பு நடவு கன்றுகள் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் கொள்முதல் செய்யாமல், தனியாரிடம் கொள்முதல் செய்தது தெரியவந்துள்ளது.

12 மாதத்தில் கரும்பு அரவைக்கு எடுத்துக்கொள்ளாமல், 13 மாதத்துக்கு பின்பு கரும்பு அரவைக்கு எடுத்துள்ளனர். இதனால், பிழித் திறன் குறைந்து அரசுக்கு ரூ.13 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், தாமதமாக மேற்கொண்டப் பணிகளினாலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

வண்ண மீன் அருங்காட்சியகம்

தர்மபுரி மாவட்டத்தில் 28 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இவற்றில் 7 குவாரிகள் மட்டுமே சுற்று சூழல் அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. 21 குவாரிகள் சுற்று சூழல் அனுதியின்றி இயங்கியது தெரியவந்துள்ளது. இந்த குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த குவாரிகளில் அளவீடு செய்து அதில் விதிமுறைகள் மீறியது தெரியவந்தால், அதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒகேனக்கல்லில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு, ஆராய்ச்சி மையம் தொடங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் மூடப்பட்டுள்ள வண்ண மீன் அருங்காட்சியகத்தை மீண்டும் திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் முகமது அஸ்லாம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, தாசில்தார்கள் ராஜராஜன், அசோக்குமார், சுகுமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.