கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பழக்கம்: காதலி பேசாததால் மனவேதனையில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

நேரில் பார்க்காமலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலில் திடீரென விரிசல் விழுந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள செம்மாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் குமார் (25 வயது). இவர், சேரன்நகரில் உள்ள ஒரு தனியார் டயர் விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். குமாருக்கும், 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து செல்போன் எண்களை பரிமாறிக் கொண்ட இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நேரில் பார்க்காமலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில், அவர்களது காதலில் திடீரென விரிசல் விழுந்தது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த இளம்பெண், குமாரிடம் பேசுவதை திடீரென நிறுத்தி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், மீண்டும் அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் பலன் இல்லாமல் போனது. காதலியுடன் பேச முடியாததால் மிகுந்த மனவேதனையில் இருந்த குமார் வீட்டில் இருந்து விஷ மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also read:ரேஷன் கடைகளில் அரிசியை மூட்டையாக கட்டிவைத்து எடை போடுகிறார்களா? - பொதுமக்களே உஷார்..!

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.