மதுரை,
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா இந்தாண்டு ஆகஸ்டு 13ம் தேதி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கவர்னர் ஆர்.என்.ரவி, பட்டச்சான்றுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
அப்போது முனைவர் பட்டம் பெற வந்த மாணவி ஜீன் ஜோசப் கவர்னர் ரவியிடம் பட்டம் பெறாமல், அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச்சான்றை காட்டி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அனைவரது முன்னிலையில் சபை நாகரிகம் இன்றி அவர் நடந்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
'கவர்னர் ரவி, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அதனால் அவரிடம் பட்டம் பெற விரும்பவில்லை' என்றும் ஜீன் ஜோசப் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தார். விசாரணையில், அவர் நாகர்கோவில் நகர திமுக துணை செயலாளர் ராஜன் என்பவரது மனைவி என்பது தெரியவந்தது.
இந்த சர்ச்சையை தொடர்ந்து, பல்கலை வேந்தரான கவர்னரிடம் பட்டம் பெற மறுத்து அவமதித்த மாணவி ஜீன்ஜோசப்பின் முனைவர் பட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாணவியின் பட்டத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி ராம்குமார் ஆதித்யன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.பட்டமளிப்பு விழா அரசியல் போராட்டத்திற்கான களம் அல்ல என்று மனுதாரர் முறையீடு செய்தார்.
இந்தநிலையில், இந்த மனு குறித்து விசாரித்த மதுரை ஐகோர்ட்டு,
பல்கலை.பட்டமளிப்பு விழாவில் கவர்னரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும். இளைய தலைமுறைகளுக்கு உரிய வழிகாட்ட வேண்டும். இதுபோல் செயல்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க பல்கலை. விதியில் அதிகாரம் உள்ளதா? மனுதாரர் மற்றும் பல்கலை. வழக்கறிஞர் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பதை டிச.18-ல் முடிவு செய்கிறது மதுரை ஐகோர்ட்டு.