வெள்ளை தங்கம் என அழைக்கப்படும் பருத்தியானது நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது.
ஊட்டச்சத்து மேலாண்மை
ஈரோடு மாவட்டத்தில் குளிர்காலம் மற்றும் கோடை இறவை பயிராக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. பருத்தியில் விளைச்சலை அதிகரிக்க பல்வேறு தொழில்நுட்பங்களான உயர் ரக விதைத்தேர்வு, விதையளவு, பயிர் இடைவெளி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த களை மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு போன்றவை பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் மண் வளத்தை பாதிக்காத வகையில் மகசூலை பெருக்குவதில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியமான பங்கு வகுக்கிறது.
இயற்கை மற்றும் இரசாயன இடுபொருட்கள், நுண்ணூட்டச்சத்து போன்றவற்றை சரியான விகிதத்தில் மண் மற்றும் பயிரின் தேவைக்கேற்ப இடுவதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையாகும்.
மக்கிய உரம்
மண்ணின் வளம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரங்களை இட வேண்டும். அதனுடன் 750 கிலோ மண்புழு உரத்தை சேர்த்து இடுவதன் மூலம் பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. மேலும் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர்ப்புழு தாக்குதலையும் கட்டுப்படுத்தலாம். இத்தகைய உரங்கள் ரசாயன உரங்களின் பயன்பாட்டு அளவை குறைக்க உதவுவதுடன் பயிர் வளர் ஊக்கியாகவும் செயல்படுகின்றன.
அங்கக உரங்களானது மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை அதிகரிப்பதுடன் நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் உதவுகிறது.
ரசாயன உரம்
மண் பரிசோதனையின் அடிப்படையில் பருத்திக்கு உரமளிப்பது சிறந்த பலனளிக்கும். பருத்தி பயிர் செய்வதற்கு முன்பு அந்த நிலத்தில் இருந்து மண் எடுத்து பரிசோதனை செய்யும்போது மண்ணில் உள்ள பல்வேறு சத்துக்களின் இருப்பு தன்மை தெரியவரும். பின்னர் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட அளவு உரங்களை பயிர்களின் வளர்நிலை அடிப்படையில் பிரித்து அளிக்கலாம். இதன் மூலம் பயிர்கள் நன்கு வளர்ச்சியடைவதுடன் ஊட்டச்சத்து விரயமாவதையும் தவிர்க்கலாம். மண் பரிசோதனை செய்ய முடியாத பட்சத்தில் பொதுவான பரிந்துரையை பின்பற்றலாம்.
ஹெக்டேருக்கு 80 கிலோ தழை சத்து, 40 கிலோ மணி சத்து, 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களாக இருந்தால் அதன் பரிந்துரைக்கேற்ப தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் 50 சதவீதம் தழை மற்றும் சாம்பல் சத்தையும், 100 சதவீதம் மணி சத்தையும் அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ளவற்றை விதைத்த 40 முதல் 45-வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.
நுண்ணூட்டச்சத்து
பருத்தி சாகுபடி செய்யும் பகுதிகளில் இரும்பு, துத்தநாகம், போரான் மற்றும் மக்னீசியம் போன்ற நுண்சத்துகளின் குறைபாடு அறியப்படுவதால் விளைச்சல் குறைகிறது. இவற்றை நிவர்த்தி செய்ய வேளாண் துறையினால் பருத்திக்கென பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்ட கலவையை ஹெக்டேருக்கு 12 கிலோ வீதம் போதுமான அளவு மணலுடன் கலந்து கடைசி உழவின்போதோ அல்லது விதைத்த 3 நாட்களுக்குள்ளோ இடுதல் அவசியம்.
நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை 40 பி.பி.எம். என்ற அளவில் பருத்தி பயிர் மொட்டு விடும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பூ உதிர்வது தவிர்க்கப்படுவதோடு மகசூலையும் அதிகரிக்கலாம். சப்பை உதிர்வதை தடுக்க 1 லிட்டருக்கு 1 மி.லி. பிளேனோபிக்ஸ் கலந்து நடவு செய்த 60 மற்றும் 90-வது நாளில் இலைவழியாக தெளிக்கலாம்.
காட்டன் பிளஸ் எனும் நுண்ணூட்டக்கலவையானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை ஏக்கருக்கு 2 கிலோ வீதம் பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பயிர்கள் வறட்சியை தாங்கி வளர்வதுடன் பூ, சப்பைகள் உதிர்வது தவிர்க்கப்பட்டு காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கிறது. எனவே இந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் மண் வளத்தை பாதுகாப்பதுடன் திட்டமிட்ட மகசூலை பருத்தி சாகுபடியில் பெறலாம்.
இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் ச.சரவணக்குமார் தெரிவித்து உள்ளார்.