தூத்துக்குடி,
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. அதே சமயம் ஏரல் அருகே கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது.
சிவகளையில் தொல்லியல் துறை இயக்குனர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், 15-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு, அதில் 40-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 தாழிகள் மூடியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தாழிகள் ஒவ்வொன்றும் 2 முதல் 4 அடி உயரம் கொண்டவையாக இருக்கின்றன. மேலும் பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துக்களும் இதில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அகழாய்வு பணிகளை நிறைவு செய்யும் வகையில், பணிகளை துரிதப்படுத்தி உள்ளதாக தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.