பழனியை அடுத்த மானூரில் சண்முகநதியின் குறுக்கே ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. பழனியில் இருந்து மானூர், கோரிக்கடவு மற்றும் அலங்கியம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த பாலம் வழியே செல்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் மற்றும் தூண்கள் பல இடங்களில் சேதமடைந்து காணப்பட்டது. குறிப்பாக தடுப்புச்சுவரில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் இருந்ததால், பாலம் வழியாக செல்ல வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வந்தனர். எனவே இந்த ஆற்றுப்பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து, போதிய பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆற்றுப்பாலத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.30 லட்சத்தில் மானூர் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில், பழைய தடுப்புச்சுவர் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, புதிய தடுப்புச்சுவர் கட்டப்பட உள்ளது. மேலும் சேதமடைந்த பகுதிகளில் சிமெண்டு பூசப்பட உள்ளது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். சீரமைப்பு பணி நடப்பதால் இரவில் பாலம் வழியாக வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.