ஸ்டெர்லைட் கழிவுகள்
தூத்துக்குடி புதுக்கோட்டையை சேர்ந்த காந்திமதிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் உப்பாற்று ஓடையில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய கந்தக, ரசாயன கழிவுகள் உப்பாற்றில் உள்ளன.இந்த ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தபோது திசை திருப்பப்பட்டு தூத்துக்குடி நகரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தனியார் பட்டா நிலங்களில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ரசாயன கழிவுகள் அனுமதியின்றி கொட்டிக்கிடக்கின்றன. தற்போது அதை தனி நபரின் லாபத்திற்காக தனியார் நிறுவனத்திற்கு விற்க முயற்சி நடக்கிறது. இந்த கழிவுகளை அகற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
விற்க முயற்சி
அந்த உத்தரவை பின்பற்றாமல் தனி நபரின் லாபத்திற்காக உப்பாற்று ஓடையில் உள்ள ரசாயன கழிவுகளை விற்க முயற்சிப்பது சட்ட விரோதமானது. எனவே உப்பாற்று ஓடை மற்றும் தனியார் இடத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை ரசாயன கழிவுகளை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, உப்பாற்று ஓடையில் ரசாயன கழிவுகளை அகற்றும்படி கடந்த 2018-ம் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் தற்போது வரை செயல்படுத்தவில்லை என்றார்.
இடைக்கால தடை
இதையடுத்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதாவது, ஓடையில் கொட்டப்பட்ட கழிவுகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியதா? ஓடையில் தாமிர கழிவுகளை கொட்டியவர்கள் யார்? கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது வரை ஏன் செயல்படுத்தவில்லை? என்பது குறித்து 12 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உப்பாற்று ஓடையில் தனியார் இடத்தில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.