சென்னை,
சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில் பேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை(2021) கொண்டு வந்தது.
இதற்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க வேண்டும் என மே 25 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இந்த விதிகளை பொறுத்தவரை குடிமக்களின் தனி உரிமையை நிலைநாட்டுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், சட்ட ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தன் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள கற்பனை சுதந்திரத்தை மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்யக் காரணமாக அமைந்துள்ளது எனவும், தனி உரிமையையும், கருத்துரிமையையும் பாதிக்கும் வகையில் அவை அமைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்கம், பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சமூக வலைதளங்களையும், ஆன்லை செய்திகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் தான் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளதாகவும், அந்த உத்தரவு நாடு முழுவதற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விதிகளை எதிர்த்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிய வழக்கு அக்டோபர் முதல் வாரம் விசாரணைக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், மும்பை ஐகோர்ட்டின் உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என கூறும் நிலையில், விதிகளை பின்பற்றும்படி டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், புதிய தொழில்நுட்ப விதியின் 9-வது பிரிவின் 3-வது உட்பிரிவில், டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது எனவும், இது ஊடகங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு கண்காணிப்பு நடைமுறை மூலம் ஊடகங்களை கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் எனக் கூறிய நீதிபதிகள், அந்த விதிக்கு இடைக்கால தடை விதித்து, இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் நான்காம் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.