சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் மாணவரணி மாநில செயலாளர் ராகேஷ் ரா.ஷம்மேர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த டிசம்பர் 2020-ல் தமிழக மருத்துவ கவுன்சில், தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் மருத்துவ படிப்பை 75 சதவீத வருகையுடன் முடித்திருக்க வேண்டும் என்றும், இணையவழி வகுப்புகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது' என்றும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இத்தகைய மாணவர்களின் பாஸ்போர்ட் சரிபார்க்கப்பட்டு, அவர்களது 5 ஆண்டு மருத்துவப்படிப்பு காலத்தில் 4 ஆண்டுகள் அவர்கள் படிக்கும் நாட்டில்தான் தங்கியிருந்தனர் என்பதும் உறுதி செய்யப்படும் என்று கூறியிருப்பது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த விதிகளின்படி தற்போது வெளிநாட்டு கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பின்னர் தமிழகத்தில் மருத்துவம் பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அவர்களது படிப்பு இங்கு செல்லாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
5 ஆண்டு படிப்பில் ஏற்கனவே 1 ஆண்டுகள் இணையவழி கல்வியில் கழிந்துவிட்ட நிலையில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை தமிழக அரசு கருத்தில் கொண்டு, சரியான முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.