சென்னை,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் உள்பட 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்த 160 பேரில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் உள்பட தகுதி வாய்ந்த 10 பேரை தேடல் குழு இறுதி செய்தது. இந்த 10 பேருக்கும் வருகின்ற 9 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவது, நிதி தேவைகளை ஈடுகட்டுவது உள்ளிட்டவை பற்றி கருத்துக்கள் கேட்கப்படும். பின்னர் 10 பேரில் இருந்து தகுதியான 3 பேரை தேர்வு செய்து, தேடல் குழு கவர்னரிடம் சமர்ப்பிக்கும். இறுதியாக 3 பேரில் ஒருவரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கவர்னர் நியமிப்பார்.