அரக்கோணம்,
கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கம்மம் நோக்கி நேற்று முன்தினம் சரக்கு ரெயில் ஒன்று உரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. நேற்று காலை வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் யார்டு பகுதி அருகே தண்டவாள கிராசிங் பகுதியில் இந்த ரெயில் சென்றது.
அப்போது வித்தியாசமான சத்தம் கேட்டு ரெயிலை டிரைவர்கள் நிறுத்தினார்கள். அவர்கள் இறங்கி சென்று பார்த்தபோது ரெயில் என்ஜினில் இருந்து 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டு இருப்பது தெரியவந்தது.
உடனே திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஹூப்ளியில் இருந்து சென்னை செல்லும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நிறுத்தப்பட்டன.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே ஊழியர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரெயிலில் தடம் புரண்ட பெட்டிகள் மற்றும் அதற்கு இணைப்பாக அருகில் இருந்த பெட்டிகளை தவிர்த்து ரெயில் என்ஜின் பக்கம் இருந்த 6 பெட்டிகளை பிரித்தனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ரெயில்வே ஊழியர்கள், சிப்பந்திகள் லூப்லைனில் தடம் புரண்டு நின்ற சரக்கு ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மெயின் லைனில் இருந்த சரக்கு ரெயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டதால் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒவ்வொன்றாக சென்னை நோக்கி தாமதமாக புறப்பட்டு சென்றன.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.