சென்னை,
கரூர் மாவட்டம் கொசூர் பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ஏற்கனவே இருந்த சமுதாயக் கூடத்தை தற்காலிகமாக அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அம்மா கிளினிகை திறந்து வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு தரையின் கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களிடம் மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில் கரூரில் நடந்த இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி கிளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம் தானே இது? என்று குறிப்பிட்டுள்ளார்.