தமிழக செய்திகள்

குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.3½ லட்சம் வாங்கிக் கொண்டு வீடுகள் ஒதுக்கப்படுகிறதா?

குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.3½ லட்சம் வாங்கிக் கொண்டு வீடுகள் ஒதுக்கப்படுகிறது என்ற தி.மு.க. உறுப்பினரின் குற்றச்சாட்டை ஓ.பன்னீர்செல்வம் மறுத்தார்.

தினத்தந்தி

சென்னை,

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் (எழும்பூர்), பி.கே.சேகர்பாபு (துறைமுகம்) ஆகியோர் குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டுவது தொடர்பாகவும், வீடுகளை பழுது பார்ப்பது தொடர்பாகவும் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினர். பி.கே.சேகர்பாபு பேசும்போது, குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.3 லட்சம் வாங்கிக்கொண்டு வீடுகள் ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.3 லட்சம் வாங்கிக்கொண்டு வீடுகள் ஒதுக்கப்படுவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டை உறுப்பினர் கூறுகிறார். சாலையோரங்களிலும், குடிசைப்பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சொந்தமாக வீடும், இடமும் இல்லை. அவர்கள் இருக்கும் இடத்திலேயே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவது தான் குடிசை மாற்று வாரியத்தின் நோக்கம்.

அனைவருக்கும் வீடுகள் கட்டி தரும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மானியம் ரூ.1 லட்சம், மாநில அரசின் மானியம் ரூ.7 லட்சம், பயனாளிகளின் பங்களிப்பு ரூ.2 லட்சம் என ரூ.11 லட்சத்தில் 400 சதுர அடியில் அவர்களுக்கு சொந்த வீடு கிடைக்கிறது. யாரிடமும் ரூ.3 லட்சம் வாங்கவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டை உறுப்பினர் கூறுகிறார். சொந்த இடம் வைத்திருந்தால் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் முழுமையாகவே அவர்களுக்கு மானியம் தந்து தனி வீடுகள் கட்டுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகரில் 272 குடியிருப்புகள் 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது தொழில்நுட்ப குழு ஆய்வு அறிக்கையின்படி மறுகட்டுமானம் செய்ய உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பங்கஜம் தெருவில் உள்ள குடியிருப்புகளும் மறுஆய்வு செய்து புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எம்.எஸ்.நகர், பி.கே.காலனியில் 64 குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனை இடித்துவிட்டு புதியதாக கட்ட தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு