தமிழக செய்திகள்

மனு அளிக்க வந்த மண்ணின் மக்களை அலட்சியப்படுத்தி அவமதிப்பதுதான் சமூக நீதியா? – சீமான் கண்டனம்

இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆதித்தொல்குடியான குறவர் சமூக மக்களின் உரிமைகளுக்காக ஆறு நாட்களாகப் பட்டினிப்போராட்டம் நடத்திய வனவேங்கைகள் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி இரணியன் தங்களது கோரிக்கைகள் குறித்தான மனுவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் அளிக்கச்சென்றபோது அவமதிக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தம்பி இரணியன் உள்ளிட்டவர்களுக்கு அமர இருக்கைகூட அளிக்கப்படாததோடு, அவர்களை நிற்க வைத்தே பேசி அனுப்பி, பக்கத்தில் வராதே என கூறி அவமதித்தது பெரும் மனவலியைத் தருகின்றது.

இம்மண்ணின் தொல்குடி மக்களை சகமனிதராகக்கூட மதியாது அலட்சியப்படுத்துவதும், அவமதிப்பதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் பெரியாரும், அண்ணாவும் கற்றுத் தந்த சமத்துவ உணர்ச்சியா? மனு அளிக்க வந்தவர்களின் கோரிக்கைகளை ஏற்பது, புறந்தள்ளுவது என்பதையெல்லாம் கடந்து, வந்தவர்களுக்கு உரிய மானுட மதிப்பை அளித்திட வேண்டாமா? இந்த ஆண்டை மனப்பான்மையைத்தான் திராவிட இயக்கம் கற்றுத் தந்ததா? வெட்கக்கேடு! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இத்தகைய அணுகுமுறைக்கு எனது வன்மையானக் கண்டனத்தைப் பதிவுசெய்கிறேன்.

குருவிக்காரர்கள், அக்கி பிக்கி, நக்கில்லே போன்ற சமூகத்தினரை குறவர்கள் என அடையாளப்படுத்துவது வரலாற்றுத்திரிபென எடுத்துக்கூறி, குறவர் சமூகத்தினருக்குத் தனி இடஒதுக்கீடு கோரும் அவர்களது கோரிக்கை என்பது மிக நியாயமானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஆகவே, வனவேங்கைகள் கட்சியின் தலைவர் தம்பி இரணியன் முன்வைக்கும் கோரிக்கையின் பக்கமிருக்கும் தார்மீகத்தை உணர்ந்து, அதனை நிறைவேற்றித் தர முன்வர வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்