தமிழக செய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட நிலையில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? வியாபாரிகள் பதில்

புதிய உச்சத்தை தொட்ட நிலையில் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்பதற்கு வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தக்காளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோதக்காளி கடந்த 2 நாட்களாக ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து 100 லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை காரணமாக ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால், வரத்து பெருமளவில் குறைந்து இருக்கிறது.

கடந்த வாரத்தில் பாதிக்கு பாதியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்திருந்த நிலையில், நேற்று 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து இருந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 7 லாரிகளும், கர்நாடகாவில் இருந்து இதர லாரிகளிலும் தக்காளி கொண்டு வரப்பட்டன. ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருந்து தக்காளி வரத்து இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாகவே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. தக்காளி விலை மட்டுமல்லாமல், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறி விலையும் சதம் அடித்து, தற்போது விலை சற்று குறைந்திருக்கிறது.

விலை மேலும் அதிகரிக்குமா?

தொடர்ந்து காய்கறி விலை உயர்வால், இல்லத்தரசிகள் காய்கறி வகைகளை வாங்குவதில் சற்று சுணக்கம் காட்டுகின்றனர். இதனால் வியாபாரமும் மந்தமாகவே உள்ளது. மற்ற காய்கறி விலை உயர்ந்தால் கூட சமாளித்துவிடலாம். ஆனால் தக்காளி விலை உயர்ந்தால், எப்படி சமாளிக்க முடியும்? என்று இல்லத்தரசிகள் குமுறுவதையும் பார்க்க முடிகிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு மேலும் இருக்குமா? அல்லது அதே விலையில் தொடருமா?, விலை குறைவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, இன்னும் 2 வார காலத்துக்கு இதே நிலைதான் நீடிக்கும். ஆனால் இதற்கு மேல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்காது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் விலை கணிசமாக குறையும். ஆனால் அதற்கிடையில் மழை தொடரும் பட்சத்தில், விலையை கணிக்க முடியாது' என்றனர்.

இருப்பில் வைக்க நடவடிக்கை தேவை

இதுகுறித்து சென்னை காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் கூறுகையில், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற சில காய்கறி வகைகளை இருப்பில் வைக்க (ஸ்டோரேஜ்) சில நாடுகள் திட்டமிட்டு, அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை 3 முதல் 6 மாதங்களுக்கும், தக்காளியை 2 வாரங்களுக்கும் இருப்பு வைக்க முடியும். அதனை தமிழ்நாட்டில் பின்பற்றினால் இதுபோன்ற விளைச்சல் பாதிப்பு ஏற்படும் காலங்களில், அதனை சந்தைக்கு கொண்டுவந்து ஓரளவுக்கு விலை உயர்வை தவிர்க்க முடியும். பொதுமக்களும் பாதிக்கப்படமாட்டார்கள். அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்னும் சில மாதங்களில் வழக்கம்போல இதே நிலை வெங்காயத்துக்கு ஏற்படும். மீண்டும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை எதிர்பார்த்து காத்திருப்போம். இதனை தவிர்க்க மேற்சொன்ன நடவடிக்கைகளை கொண்டுவரலாம்' என்றார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு