தமிழக செய்திகள்

சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்புகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

சென்னை,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி வருகிறது.

அந்த பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்த தகவலை இஸ்ரேலிய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் புகைப்படத்தை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.