சென்னை,
சென்னை மீனம்பாக்கத்தில் நிருபர்களை சந்தித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தடுப்பூசி இதுவரை எவ்வளவு வந்துள்ளது, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, எவ்வளவு தடுப்பூசிகள் வீணானது, என்ற விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். தமிழகத்தில் தினந்தோறும் தடுப்பூசிகளின் அளவு, பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து செய்தியாளர்கள் மத்தியில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. ஆனால் என்ன காரணமோ? இதை எதையும் பார்க்காமல், மீண்டும் வெள்ளை அறிக்கை கேட்கிறார். வெள்ளை அறிக்கை தருவது எங்களது கடமையும் கூட.
இதில் அரசியல் செய்யக்கூடாது என நாங்கள் நினைத்தோம். ஆனால் வேறு வழியே இல்லை. வெள்ளை அறிக்கை அவரே கேட்பதால், கடந்த கால மருத்துவத்துறையின் செயல்பாட்டை அவரே அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவதால், அதை சொல்லுவது அவசியமானது. தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 80 லட்சத்து 32 ஆயிரத்து 170 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில் 1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 174 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. கையிருப்பில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதிதான் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. அந்தவகையில் ஜனவரி 16-ந்தேதி முதல் மே 7-ந்தேதி வரை, அதாவது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அந்த 103 நாட்களில் 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அதன்படி அவரது ஆட்சியில் தினசரி ஒரு நாளைக்கு சராசரியாக 61 ஆயிரத்து 441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
இதையடுத்து தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையாலும், தமிழக மக்களிடம் ஏற்படுத்தி உள்ள விழிப்புணர்வு காரணமாகவும், தற்போது தமிழகத்தில் தினசரி தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 297 ஆக உள்ளது.
அந்தவகையில் 70 நாட்களில் 1 கோடியே 12 லட்சத்து 90 ஆயிரத்து 767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசிடம் எவ்வளவு தடுப்பூசி கேட்டிருந்தாலும், கொடுப்பதற்கு தயாராகவே இருந்தது. அந்தவகையில் அவர்களிடம் கூடுதலாகவே தடுப்பூசி கேட்டு, இன்னும் கூடுதலாகவே தடுப்பூசியை செலுத்தியிருக்கலாம்.
அதில் அ.தி.மு.க அரசு கவனமே செலுத்தவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும், வருகிற தடுப்பூசியை அரை மணி நேரம் கூட தாமதிக்காமல், மாவட்டந்தோறும் பிரித்து அனுப்பி தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விரும்பினால், மாவட்டந்தோறும் தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தர தயாராக இருக்கிறோம். அ.தி.மு.க ஆட்சியில் 6 சதவீத தடுப்பூசி வீணாக்கப்பட்டது. அதன்படி 4 லட்சத்து 34 ஆயிரத்து 838 தடுப்பூசிகள் அடங்கும். தடுப்பூசி மருந்து குப்பிகளில் 5 மி.லி க்கு பதிலாக, ஓவர் பில்லிங் முறையில் 5.6 மி.லி என்ற அளவில் தற்போது இருந்து கொண்டிருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு குப்பிகளிலும் 16 முதல் 26 சதவீதம் வரை கூடுதலாக மருந்துகள் வருகிறது. அந்தவகையில் 7 லட்சத்து 36 ஆயிரம் டோஸ்கள் கூடுதலாக போடப்படுள்ளன. கூடுதலாக வந்ததன் விளைவு, கடந்த ஆட்சியில் வீணாக்கப்பட்டதையும் சேர்த்து கூடுதலாக 3 லட்சத்து 2 ஆயிரத்து 70 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜ.க வை சேர்ந்த குஷ்பு ஒரு தொலைக்காட்சியில் ஜூன் மாதத்தில் மட்டும் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணானதாக பொய்யான தகவலை சொல்லியிருக்கிறார்.
இந்த துறையின் செயல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். 6 மாநில முதல்-அமைச்சர்களுடன் நடந்த பிரதமரின் காணொலி காட்சி கூட்டத்தில், இந்தியாவிலேயே, கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளை விட கூடுதலாக தடுப்பூசி போட்ட மாநிலம் தமிழகம் தான் என பிரதமர் பாராட்டி உள்ளார்.
கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் மத்திய அரசிடம் கூடுதலாக தடுப்பூசிகளை கேட்க முடியாதவர்கள், வந்த தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்த தெரியாதவர்கள் வெள்ளை அறிக்கை கேட்பது வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால், அவரது முன்னிலையிலேயே வெள்ளை அறிக்கை தர தயாராக இருக்கிறேன்.
அவர்களே கேட்ட பிறகு வெள்ளை அறிக்கையை சட்டமன்றத்திலும், மகிழ்ச்சியுடன் கொடுக்க தயாராக இருக்கிறோம். இந்த வாய்ப்பைதான் நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசு அறிவித்தப்படி தடுப்பூசிகள் அட்டவணை போட்டு அனுப்பி கொண்டிருக்கின்றனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொரோனா முற்றுக்கு வந்தபிறகு அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.