சென்னை,
திருச்சி மண்டல ரெயில்வே அலுவலக நுழைவு வாயிலில் கர்தவ்ய த்வார் என்ற இந்தி வார்த்தை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், மறைமுக இந்தி திணிப்பு என மத்திய அரசையும், ரெயில்வே நிர்வாகத்தினரையும் கண்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.
திமுகவினர் இன்று மதியம் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு தமிழ், இந்தி, ஆங்கிலம் வடிவில் எழுதப்பட்டிருந்த இந்தி வார்த்தை அகற்றப்பட்டுள்ளது. அங்கு தமிழ் மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் - அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்!
டெல்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே Out Of Control-தான்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.