ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தது வரையில் நடந்தது என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி, அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி வரையில் டாக்டர்கள் தவிர யாரும் அவரை நேரடியாக பார்க்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.
இதனால் டாக்டர்கள் தவிர்த்து வேறு யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்களா, பார்க்க அனுமதி அளிக்கப்பட்டதா என்பது குறித்த மர்ம முடிச்சு அவிழாமல் இருந்து வருகிறது.
இதனால் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றியும், மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்ததால், இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வம், இணைப்புக்கு இதை ஒரு நிபந்தனையாக வைத்தார்.
அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 17-ந் தேதி, சென்னை கோட்டையில் நிருபர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது அவர், பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அதை செயல்படுத்தும் விதமாக, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நேற்று முன்தினம் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்ததாக கூறினர். ஆனால் சில அமைச்சர்கள் பார்க்க வில்லை என கூறி வருகின்றனர். இதனால் மீண்டும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குழப்பமே நீடிக்கிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை, அதாவது மருத்துவ மொழியில் நோயாளியின் உடல்நிலை அறிக்கை (patient care report) தனியார் டிவி ஒன்றுக்கு கிடைத்துள்ளது. அது வெளியிட்டு உள்ள விவரம் வருமாறு:-
சென்ற ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு, ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இரவு 10 மணிக்கு தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது.
10:01-க்கே அப்போலோவில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் போயஸ் இல்லத்தை அடையும் போது மணி 10:06. ஆம்புலன்ஸில் இருந்து விரைந்து சென்ற 3 பேர் கொண்ட மருத்துவக்குழு, போயஸ் தோட்ட இல்லத்தின் முதல் தளத்திற்கு சென்றது. அங்கு மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்த முதல்வரை தட்டி எழுப்ப முயற்சித்துள்ளனர். அசைவு மட்டுமே இருந்ததும், முதல்வரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் முதல்வர் அனுமதிக்கப்பட்டார். சராசரியாக 120/80 ஆக இருக்க வேண்டிய ரத்த அழுத்தமானது 140/70 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், நிமிடத்திற்கு சராசரியாக 72 என இருக்க வேண்டிய இதயத்துடிப்பானது 80 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை அளவானதும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. சராசரி மனிதனுக்கு 120 எம்ஜி இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவானது ஜெயலலிதாவுக்கு 508 எம்ஜி என்ற அபாய நிலையில் இருந்ததும் நமக்கு கிடைத்துள்ள உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே, ஜெயலலிதா காய்ச்சல் மற்றும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்திருக்கிறது. நுரையீரல் தொற்று காரணமாக அவர் உடலில் 100% இருக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு 45% என்ற அபாய நிலையிலேயே இருந்திருக்கிறது.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று இரவில் அவரது இல்லத்தில் நடந்தவை என பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், ஜெயலலிதா உடலில் காயமோ, புண்களோ இருந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சர்க்கரை அதிகரிப்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, நிமோனியா காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக மருத்துவ உடல்நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.