நாகர்கோவில்,
நாகர்கோவில் வடசேரி ராஜபாதை பரதர் தெருவில் உள்ள பூங்காவில் எம்.ஜி.ஆர். மார்பளவு சிலை உள்ளது. அதன் அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவ சிலையை அமைத்து நாளை (திங்கட்கிழமை) திறக்க அப்பகுதி அ.தி.மு.க.வினர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக சென்னையில் ஜெயலலிதாவின் 8 அடி உருவச்சிலை தயாரிக்கப்பட்டது. அந்த சிலை நாகர்கோவில் வந்து சேர்ந்தது.
நேற்று காலை ராஜபாதை பரதர் தெரு பூங்காவில் எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதா சிலை அமைக் கும் பணியை முன்னாள் கவுன்சிலர் சகாயராஜ் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் செய்து வந்தனர். இது அப்பகுதியில் உள்ளவர்கள் மூலம் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் பரவியது. இந்த தகவல் அப்பகுதி தி.மு.க.வினருக்கும் தெரிய வந்தது.
புகார்
உடனே அவர்கள் வடசேரி போலீசாருக்கு போன்மூலம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜபாதை பகுதியில் அனுமதியின்றி ஜெயலலிதா சிலை அமைக்கப்படுவதாகவும், அதனை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வடசேரி போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு ஜெயலலிதா சிலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.
உடனே போலீசார், அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று சிலையை வைக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து ஜெயலலிதா சிலை துணியால் மூடப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் துணியை அகற்றி சிலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அகற்றம்
இந்த தகவலை அறிந்த மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரும் குவிக்கப்பட்டனர். பின்னர் அதிகாரிகள், அ.தி.மு.க. வினரிடம் முறையான அனுமதி பெற்று சிலையை நிறுவும்படியும், சிலை அமைக்க அனுமதி கோரி கடிதம் கொடுக்கும்படியும் கூறினர். இந்த பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகளுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தையின் முடிவில் ஜெயலலிதா சிலையை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். உடனே அ.தி. மு.க.வினர் சிலையை அங்கிருந்து தூக்கி சென்றனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. முறையான அனுமதி பெற்று விரைவில் அதே இடத்தில் ஜெயலலிதா சிலையை திறப்போம் என்று அ.தி.மு.க.வினர் கூறினர்.
கடிதம்
ஜெயலலிதா சிலையை அமைக்க அனுமதி கோரி முறையாக அதிகாரிகளுக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும், அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்றும், அதன்பிறகு ஜெயலலிதா சிலை இதே இடத்தில் திறக்கப்படும் என்றும் அப்பகுதி அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.