தமிழக செய்திகள்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை ஓ.பன்னீர்செல்வம்தான் எல்லா முடிவையும் எடுத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும் பற்றி பொறுப்பு முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நன்கு அறிந்தவராக இருந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

சென்னை,

சுகாதாரத்துறை அமைச் சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உண்மை நிகழ்வுகள் அனைத்தையும் உடனிருந்து நன்கு அறிந்திருந்தபோதிலும் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சேபத்திற்குரிய அபத்தமான செய்திகளை கூறிவருவது, அவர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் சேர்ப்பதோடு அரசியல் ஆதாயம் பெறவே இத்தகைய கருத்துகளை மக்கள் மனதில் விதைக்க முயற்சிக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையை சேர்ந்த புகழ்பெற்ற டாக்டர்கள், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை அளித்தனர். அவர்களோடு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு டாக்டர்களும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி டாக்டர்களும், மும்பை டாடா நினைவு மருத்துவமனை டாக்டர்களும், பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும், ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும், புகழ்பெற்ற இதய டாக்டர்கள் ஷமின் சர்மா, நரேந்திர ரெட்டி போன்றவர்களும், லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் நேரில் வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்கள்.

மேலும், வீடியோ கான்பரன்சிங் (காணொளி காட்சி) மூலம் அமெரிக்காவின் நியூயார்க் ஜான் ஆப்கின்ஸ் மருத்துவமனை டாக்டர் ஸ்டூவார்ட் ரசலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பங்குபெற்றிருந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க தமிழக அரசின் சார்பில் 5 டாக்டர்கள் கொண்ட சிறப்புக்குழுவும் அமைக்கப்பட்டது. அந்த டாக்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றிய முழுத்தகவலையும் பெற்றுவந்தார்கள்.

அரசு தலைமைச் செயலாளர், அரசு ஆலோசகர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு நாளும் காலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் குழு எடுத்துரைத்தது. அத்தகைய கூட்டங்களில் பல நேரங்களில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ஒரு விசாரணை என்றால் அதில் முதல் நபராக விசாரிக்கப்படுபவர் ஓ.பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும். காரணம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அனைத்து சிகிச்சைகளையும் பற்றி பொறுப்பு முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நன்கு அறிந்தவராக இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 19-வது நாளே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தரப்பட்டது. அவருக்குத் தெரியாமல் எந்தவொரு சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு தரப்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றியோ, அவருடைய மரணம் குறித்தோ தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று தனது கலகத்தை தொடங்கிய பின்னரும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார். முதல்-அமைச்சர் பதவி இல்லை என்ற நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தையே கொச்சைப்படுத்தும் அளவிற்கும் அ.தி.மு.க.வை களங்கப்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார்.

பல்வேறு தலைவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு டாக்டர் பிரதாப் ரெட்டி தலைமையில் டாக்டர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை, அளிக்கப்படும் சிகிச்சை போன்றவற்றை விளக்கிக் கூறியபோது உடன் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது ஒருமுறை கூட எவ்வித மாற்றுக்கருத்தையும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கவில்லையே. இன்றைக்கு ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் நிலைக்கு அவர் தரம் தாழ்ந்துவிட்டாரே என்று வேதனைப்படுகிறேன்.

பதவியில் இருக்கும்போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சு என்று ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. இவ்வாறு அறிக்கையில் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.