சென்னை
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன? என்பது குறித்த விவரத்தையும் எழுத்துபூர்வமாக அரசு மருத்துவர் பாலாஜி இன்று தாக்கல் செய்தார். பின்னர் டாக்டர் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சில மருத்துவ குறிப்புகள் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கேட்டுக் கொண்டதின் பேரில் நான் கொடுத்தேன். அதற்காக சில கேள்விகளை கேட்டதற்கு நான் பதில் கூறினேன். எழுத்து பூர்வமாக தாக்கல் செய்தேன்.
தேவைப்பட்டால் அடுத்த மாதம் மீண்டும் ஆஜராவேன். தற்போது எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளேன். அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தாக்கல் செய்துள்ள விவரங்கள் குறித்து அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது சசிகலா விளக்கம் அளிப்பது தொடர்பாக 15 நாள் அவகாசம் கேட்கப்பட்டது. இதுகுறித்து ஆணையம் 30-ந்தேதி தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் என தெரிகிறது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை தடவியல் சோதனைக்கு அனுப்பி உண்மையை தெரிவிக்க வேண்டும். என கூறினார்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் செயலாளர்களாக பணியாற்றிய வெங்கட்ரமணன், விஜய குமார், ராமலிங்கம், ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகிய 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது.
வெங்கட்ரமணன் வருகிற 30-ந்தேதியும், விஜயகுமார் 31-ந்தேதியும், ராமலிங்கம் பிப்ரவரி 1-ந்தேதி, ஜெயஸ்ரீ முரளிதரன் 2-ந்தேதியும் ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. இவர்களில் வெங்கட ரமணன் ஓய்வு பெற்று விட்டார். மற்ற 3 பேரும் தற்போது அரசு பணியில் உள்ளனர்.
இதேபோல் ஜெயலலிதா கார் டிரைவர் ஐயப்பன், பிப்ரவரி 8-ந்தேதி ஆஜராகவும், சசிகலாவின் செயலாளர் கார்த்திகேயன் பிப்ரவரி 5-ந்தேதி ஆஜராகவும் சம்மன் அனுப்பி உள்ளது.
#Jayalalithaa #JayalalithaaDeath