தமிழக செய்திகள்

ஜெயலலிதா கடைசியாக பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட ஆடியோ பதிவு உண்மையா? ஆணையம் விசாரிக்க முடிவு

ஜெயலலிதா கடைசியாக பேசியதாக தாக்கல் செய்யப்பட்ட ஆடியோ பதிவு உண்மைதானா? என்பது குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்திருக்கிறது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, கடைசியாக மூச்சு திணறலுடன் பேசியதாக கூறி ஆடியோ ஒன்றை அவருடைய குடும்ப டாக்டர் சிவக்குமார் ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி எடுத்ததாக கூறப்பட்ட அந்த ஆடியோவில் ரத்த அழுத்தம் 140/80 இருக்கிறது என்று டாக்டர் ஒருவர் கூறுவார்.

அதற்கு ஜெயலலிதா இது எனக்கு நார்மல் தான் என்று சொல்வதாக அந்த ஆடியோ பதிவில் உள்ளது. ஆனால் 27-ந்தேதி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டதாக ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ள மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி 130/60, 90/110 என்ற அளவில் தான் ரத்த அழுத்தம் இருந்திருக்கிறது. 140/80 இரத்த அழுத்தம் இருந்தது என்ற பதிவே இல்லை என்பதை ஆறுமுகசாமி ஆணையம் உறுதி செய்து இருக்கிறது.

தீவிரமாக விசாரிக்க முடிவு

ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆடியோவை எடுத்தது டாக்டர் அர்ச்சனா என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அர்ச்சனா 2016-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதிக்கு பின்னர் தான் அப்பல்லோவில் பணியில் சேர்ந்துள்ளார். இதை ஆணையத்தில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அந்த ஆடியோ பதிவு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று ஆறுமுகசாமி ஆணையம் சந்தேகிக்கிறது. முன்னுக்குப்பின் முரணான தகவல் வெளியாகியதால் அந்த ஆடியோ எங்கு எடுக்கப்பட்டது? எந்த தேதியில் எடுக்கப்பட்டது? என்பதை தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...