சென்னை,
ஜெ.தீபாவின் கணவர் மாதவன் அனுப்பியதின் பேரில்தான், வருமான வரி அதிகாரி வேடத்தில் வந்ததாக கைதானவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வருமானவரி அதிகாரி சோதனை
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா. இவருடைய இல்லம் சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ளது. இவருடைய வீட்டில் வருமானவரி சோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து வந்திருப்பதாக 4 பேர் மாம்பலம் உதவி கமிஷனர் ஏ.செல்வனிடம் தெரிவித்தனர். அதற்காக போலீஸ் பாதுகாப்பு கேட்டு வருமான வரித்துறை சார்பில் வாரண்டு ஒன்றையும் அவர்கள் உதவி கமிஷனரிடம் கொடுத்தனர்.
இதை உண்மை என்று நம்பிய உதவி கமிஷனர் போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை ஜெ.தீபாவின் இல்லத்துக்கு அனுப்பிவைத்தார். 4 பேரும் தனியாக ஒரு காரில் கடந்த சனிக்கிழமை அன்று காலை ஜெ.தீபா இல்லத்துக்கு வந்தனர். ஜெ.தீபா அப்போது வீட்டில் இல்லை. சோதனை போட வந்த 4 பேரில் 3 பேர் வெளியில் நின்றுகொண்டனர். வருமானவரி அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒரு நபர் மட்டும் ஜெ.தீபாவின் வீட்டிற்குள் சென்று சோதனையை தொடங்கினார்.
மாதவனிடம் விசாரணை
ஜெ.தீபாவின் வீட்டில் அப்போது அவரது கணவர் மாதவன் இருந்தார். வருமானவரி அதிகாரி என்ற பெயரில் வந்தவர், மாதவனிடம் விசாரணை நடத்தினார். தன்னுடைய அடையாள அட்டையை காண்பித்து ஜெ.தீபா வீட்டு பீரோவை திறந்து சோதனையில் ஈடுபட்டார். மாதவன் இதுகுறித்து வெளியூரில் இருந்த தீபாவுக்கு செல்போனில் பேசி தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையில் இதுபற்றி தகவல் கிடைத்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் வக்கீல்கள் சிலர் தீபாவின் வீட்டிற்கு வந்தனர். இந்த தகவல் தெரிந்து ஏராளமான பத்திரிகையாளர்களும் ஜெ.தீபா வீட்டில் கூடிவிட்டனர். இதற்குள் வருமானவரி அதிகாரிகள் என்ற பெயரில் வெளியில் நின்றிருந்த 3 பேர் நைசாக தப்பிச்சென்றுவிட்டனர். வீட்டிற்குள் இருந்த நபரிடம் வக்கீல்கள் அதிரடியாக சில கேள்விகளை கேட்டார்கள். தொலைக் காட்சி படக்குழுவினரும் வீட்டிற்குள்ளே சென்று படம்பிடிக்க ஆரம்பித்தனர்.
தப்பி ஓட்டம்
இந்த நிலையில், சோதனையில் ஈடுபட்ட நபர் திடீரென்று வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்தார். வீட்டின் மதில்சுவரை தாண்டி அவர் தப்பி ஓடினார். அவர் உண்மையான வருமானவரி அதிகாரி இல்லை என்றும், போலி நபர் என்றும் தெரியவந்தது.
காவலுக்கு நின்றிருந்த போலீசார் அவரை பிடிப்பதற்காக விரட்டிச்சென்றனர். ஆனால் அவர் போலீசார் கையில் சிக்கவில்லை.
கேமராவில் பதிவு
போலி வருமானவரி அதிகாரியின் உருவம் ஜெ.தீபாவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர் தன்னுடைய அடையாள அட்டையையும், வருமான வரித்துறை சார்பில் கொண்டு வந்த வாரண்டையும், ஜெ.தீபா வீட்டிலேயே போட்டுவிட்டு போய்விட்டார்.
இந்த சம்பவம் குறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவன் புகார் கொடுத்தார். அந்த புகார் அடிப்படையில், தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன், உதவி கமிஷனர் செல்வன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். போலி வருமானவரி அதிகாரியின் அடையாள அட்டையில் அவரது பெயர் மிதேஷ்குமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபற்றிய விவரங்களை அவரது புகைப்படத்தோடு போலீசார் பத்திரிகைகளில் வெளியிட்டனர். போலி வருமானவரி அதிகாரியை தேடிவந்தார்கள்.
போலி நபர் சரண்
இந்த நிலையில் பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படத்தை பார்த்து, போலி வருமானவரி அதிகாரியின் உண்மையான பெயர் பிரபாகரன் (வயது 33) என்றும், விழுப்புரம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் என்றும் ஏராளமானோர் மாம்பலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை அடிப்படையாக வைத்து பிரபாகரனை விழுப்புரத்திற்கு சென்று போலீசார் அவருடைய வீட்டில் தேடினார்கள். ஆனால் பிரபாகரன் வீட்டில் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரபாகரன் மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தனர். அவரது வாக்குமூலம் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
அவர் தீபாவின் கணவர் மாதவன் தான், தன்னை வருமானவரி அதிகாரியாக நடிக்க வைத்து நாடகமாடினார் என்று போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
எம்.பி.ஏ. பட்டதாரி
நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளேன். எனக்கு திருமணம் ஆகவில்லை. எனது குடும்பம் வசதியான குடும்பம். எனது தந்தை ஓட்டல் தொழில் செய்கிறார். புதுச்சேரியில் எங்களுக்கு சொந்தமான ஓட்டலை நான் பார்த்து வந்தேன்.
தீபாவின் கணவர் மாதவன் எனது ஓட்டலுக்கு ஒரு நாள் சாப்பிட வந்தார். அவர் தீபாவின் கணவர் என்பதை அறிந்த உடன் அவர் சாப்பிட்டதற்கு நான் பணம் வாங்கவில்லை. அன்று முதல் அவர் எனக்கு நண்பர் ஆனார். புதுச்சேரிக்கு வரும்போதெல்லாம் எனது ஓட்டலில் தான் சாப்பிடுவார்.
சினிமா ஆசை
அவர் சினிமாவில் பிரபல இயக்குனர்கள் தனக்கு தெரிந்தவர்கள் என்றும், என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறினார். இதற்காக என்னுடைய புகைப்படத்தை வாங்கிக்கொண்டார். திடீரென்று எனக்கு கொரியர் தபால் ஒன்றை அனுப்பிவைத்தார். அதற்குள் வருமானவரி அதிகாரியின் போலி அடையாள அட்டை, வருமான வரித்துறையின் போலி வாரண்டு போன்றவை இருந்தன.
வருமான வரித்துறை அதிகாரியின் அடையாள அட்டையில் என்னுடைய புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. இதுபற்றி நான் கேட்டபோது மாதவன் என்னை சென்னைக்கு வருமாறு கூப்பிட்டார். அதன்பேரில் நான் அவரை சென்னைக்கு வந்து சந்தித்தேன். வாரண்டை தியாகராயநகர் உதவி கமிஷனரிடம் காட்டினால் அவர் பாதுகாப்புக்காக போலீசாரை அனுப்புவார். நீ தைரியமாக தீபாவின் வீட்டிற்குள் சென்று சோதனை போடுவது போல் நடிக்க வேண்டும். தீபாவின் வீட்டிற்கு வந்தால் நான் அங்கு தான் இருப்பேன். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மாதவன் கூறினார்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் சினிமா ஆசையில் மாதவன் சொன்னபடி போலீஸ் உதவி கமிஷனரிடம் போலி வாரண்டை காண்பித்தேன். அவரும் உடனடியாக என்னுடன் பாதுகாப்புக்காக போலீசாரை அனுப்பிவைத்தார்.
பணம்-நகைகள்
ஜெ.தீபாவின் வீட்டிற்கு சென்றேன் அங்கு மாதவன் இருந்தார். தைரியமாக சோதனை போடுவது போல் நடி என்று கூறினார். நானும் பீரோ உள்ளிட்டவைகளை திறந்து பார்த்து சோதனை போடுவது போல் நடித்தேன்.
அப்போது மாதவன் ஜெ.தீபாவிற்கு போன் செய்து பணம் நகைகளை எங்கே வைத்திருக்கிறாய் வருமானவரி அதிகாரி சோதனை போட வந்துள்ளார். பணம்-நகைகள் இருக்கும் இடத்தை சொல் என்று தீபாவிடம் கேட்டார்.
பணம்-நகைகளை எதற்கு கேட்கிறீர்கள்? இதனால் பிரச்சினை வராதா? என்று பயத்துடன் மாதவனிடம் கேட்டேன். பணம்-நகைகளை எடுத்துக்கொண்டு நீ போய்விடு. பின்னர் அதை நாம் பங்குபோட்டு கொள்ளலாம் என்று மாதவன் கூறினார்.
இதற்குள் ஜெ.தீபாவின் ஆதரவாளர்களும், ஏராளமான வக்கீல்களும், தொலைக்காட்சி புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் வீட்டிற்குள் வந்துவிட்டனர். வக்கீல்கள் என்னிடமிருந்த அடையாள அட்டை, வாரண்டு போன்றவற்றை வாங்கிப்பார்த்தனர். என்னிடம் துருவித்துருவி கேள்வி கேட்டார்கள். தொலைக்காட்சி புகைப்படக்காரர்கள் என்னை படம் பிடித்தனர். இதனால் நான் பயந்தேன்.
தப்பி ஓட்டம்
நிலைமை மோசமானதால் மதில்சுவரை ஏறிக்குதித்து தப்பி ஓடிவிடு என்று மாதவன் என்னிடம் கூறினார். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேறி வந்து மதில் சுவரை தாண்டிக்குதித்து தப்பி ஓடி வந்துவிட்டேன்.
பத்திரிகைகளில் என்னுடைய புகைப்படத்தை பார்த்து எனக்கு மேலும் பயம் அதிகமாகிவிட்டது. தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்கொண்டோமே என்று மிகவும் மனம் உளைச்சலுக்கு ஆளானேன். புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தேன். இதற்கிடையில் என்னை அடையாளம் கண்டு போலீசார் எனது குடும்பத்தினரிடம் விசாரிக்க ஆரம்பித்தனர். இதனால் வேறு வழியில்லாமல் நானே மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கு வந்துவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
பிரபாகரன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாதவன் வாட்ஸ்-அப் வாயிலாகவே செல்போனில் தொடர்பு கொண்டு பிரபாகரனிடம் பேசியுள்ளார். அது தொடர்பான தனது செல்போனில் பதிவாகியிருந்த ஆதாரங்களை பிரபாகரன் போலீசாரிடம் காண்பித்தார்.
மேலும் 3 பேர்
போலி வருமானவரி அதிகாரி பிரபாகரனோடு வந்த மேலும் 3 பேரையும் போலீசார் தேடுகிறார்கள். போலி அடையாள அட்டை தயாரித்தல், வருமான வரித்துறையின் போலி வாரண்டு தயாரித்தல் போன்ற குற்றங்களுக்கு அவர்கள் 3 பேரும் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள போலி வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். மாதவன் மீது பிரபாகரன் கூறிய குற்றச்சாட்டிற்கு அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அவரிடம் விசாரணை நடத்தியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.