பல்லாவரம்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும். இதனை முன்னிட்டு, கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம அளவிலான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை / நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் தீவிர கண்காணிப்புக்கான பணிகளில் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும். தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள் மற்றும் 2,160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன. இந்த நிலையில், சென்னை அருகே பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.19.63 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்கம், 34 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. போதிய ஆவணங்கள் இல்லாமல் பிரபல நகை கடைக்கு கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்ட நகைகளை வருமான வரித்துறையினரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.