சென்னை,
காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது. தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைவாக கிடைக்கும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், காவிரி வழக்கில்
உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:- காவிரி வழக்கில் உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இத்தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தில் பாசன பரப்பின் அளவு, இருபோக விவசாயம் தற்போது கேள்வி குறியாகியுள்ளது.
எனினும் தமிழக விவசாயிகளின் நலன் கருதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரின் அளவையாவது கர்நாடக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். அதனை மத்திய அரசு உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.