சென்னை,
அண்மைக்காலமாக பிக்பாஸ் ஜூலியின் பெயர் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர், தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார். இந்நிலையில், தற்போது “வெல்லும் தமிழ் பெண்கள்” நிகழ்ச்சியில் ஜூலி பேசியது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நம்மை வளர்த்து விட்ட இந்த திராவிட அரசை டெல்லியில் இருந்து ரெய்டு, சிபிஐ ரெய்டுகள் மூலம் பலவீனப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த மாபெரும் இயக்கத்தை வீழ்த்த பார்க்கிறார்கள். அதற்கு எதிராக நான் குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
இப்போது நிறைய திரை தளபதிகள் அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில் ஓட்டைப் பிரித்து மாநிலத்தை கைப்பற்றலாம் என்று நினைக்கிறார்கள். இதை டெல்லியில் செய்திருக்கிறார்கள். இன்னும் சில மாநிலங்களிலும் செய்கிறார்கள். ஆனால் இங்கே சிப்ப சொப்பனமாக தளபதி இருக்கிறார். என்னைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.
இது தமிழ்நாடு, திராவிட கோட்டை. எந்த ஸ்டார் கடப்பரையையும் கொண்டு இதை அசைக்க முடியாது. இந்த கோட்டை கதவுக்கு முன் எங்களைப் போன்ற சிறிய தடுப்புகள் இருக்கின்றன. உங்களால் எங்களை கூட அசைக்க முடியாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறு பரப்புங்கள். கேரக்டரை தவறாக பேசுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட கூடியவர்கள் இல்லை” என்று கூறினார்.