சென்னை,
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்ற போது, புன்னைவனநாதர் சன்னதியில் இருந்து மயில் சிலை மாயமானது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் மயில் சிலை காணாமல் போனது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உண்மை கண்டறியும் குழு இதுவரை 29 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், மேலும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலின் அலகில் மலர் தான் இருந்தது என ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அறநிலையத்துறை, ஐகோர்ட் அனுமதித்தால் அலகில் மலர் உடைய மயில் சிலை கோவிலில் வைக்கப்படும் எனவும் கூறியது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 28-ந்தேதிக்கு ஒத்திவத்தனர்.