சேதுபாவாசத்திரம்,
கடந்த 2018-ம் ஆண்டு இதே நாள்(நவம்பர் 16) காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் உருக்குலைந்து சின்னாபின்னமாகி இருந்தன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை என காவிரித்தாயின் கரை எங்கும் அலங்கோலமாக மாறின. இந்த மாவட்டங்களின் சாலை நெடுகிலும் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்து கிடந்தன. பிற மாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டு, வீடுகள், தோப்புகளை இழந்த மக்கள் உதவிக்காக அபயக்குரல் எழுப்பினர்.
டெல்டாவின் கடைக்கோடி பகுதி மக்கள் பல வாரங்களை மின்சாரம், தண்ணீர் இன்றி கடத்தினர். வீடு, தோட்டம் மற்றும் உடைமைகளை இழந்த மக்கள் துயரத்துடன், பசியுடனும் பல நாட்களாக தவித்தனர். இந்த அத்தனை துயரங்களுக்கும் காரணம், வங்க கடலில் உருவாகி 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் ததி நள்ளிரவில் கரையை கடந்த கஜா எனும் கோரப்புயல்.
டெல்டாவின் உயிர் நாடியான கடைமடை பகுதிகளில் கஜா புயல் மிகுந்த பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையல்ல.. இந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தாங்கள் பெற்ற பிள்ளைகளை போல தென்னம்பிள்ளைகளையும்(தென்னை மரங்கள்) அன்பும், பாசமும், உரமும் ஊட்டி வளர்ப்பார்கள். பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவிய தென்னம்பிள்ளைகளை கஜா புயல் குறி வைத்து தாக்கி அழித்தது.
இதேபோல பணம் தரும் மரங்கள், பயிர்கள், ஆடு, மாடுகள் என அனைத்தையும் கஜா காவு வாங்கியதால், புயல் கரையை கடந்து 3 ஆண்டுகளாகியும் அதன் சோக நினைவலைகளில் இருந்து வெளிவர முடியாமல் காவிரி டெல்டா மக்கள் தவிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கயிறு தொழிற்சாலைகள் பலவற்றை புயல் தரைமட்டமாக்கியது. மீனவர்களின் படகுகளையும் புயல் விட்டு வைக்காமல் பந்தாடியது. மொத்தத்தில் கஜா புயல் டெல்டா மக்களை பொருளாதாரத்தில் 50 ஆண்டுகாலம் பின்நோக்கி தள்ளியது.
கஜா புயலுக்கு பிந்தைய வாழ்க்கை டெல்டா மக்களுக்கு கடும் சிரமத்தை தந்தன. புயலில் சாய்ந்த தென்னை மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நட்டு, புயலுக்கு முந்தைய வாழ்க்கையை நினைத்து இன்றளவும் சோக கண்ணீர் வடிக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.
மீனவர்கள் அரசு வழங்கிய நிவாரணம் போதவில்லை என இன்றளவும் தங்களுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். கயிறு தொழிற்சாலைகளுக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. புயல் பாதித்து 6 மாதங்களுக்கு பின் தென்னை ஒன்றுக்கு ரூ.1,100 வீதம் அரசு நிவாரணம் வழங்கியது.
அதன்பின் பெரும்பாலான இடங்களில் தென்னங்கன்றுகள் நடப்பட்டுள்ளது. புயலுக்கு பறிகொடுத்த மரங்களை ஈடுகட்டும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விதைப் பந்துகள் தயார் செய்து வினியோகித்து வருகின்றன.
மா, பலா போன்ற மரக்கன்றுகளும் நடப்பட்டு வருகின்றன. சேதுபாவாத்திரம் பகுதியில் புயலுக்கு பிறகு ஒரு சில கயிறு தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. தங்களது உயிரை மட்டும் விட்டு விட்டு உடைமைகளை கஜா புயல் பறித்து சென்று விட்டதே என டெல்டா மக்கள் இன்றளவும் கண்ணீர் வடிக்கின்றனர்.