தமிழக செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேல்முறையீடு சிறப்பு முகாம்:அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேல்முறையீடு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை நிவர்த்தி செய்யவும், மேல்முறையீடு தொடர்பான தெளிவுரை வழங்கவும் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

அமைச்சர் ஆய்வு

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் உள்ள உதவி மையங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். விண்ணப்பித்தலில் உள்ள குறைகள் களையப்பட்டு, உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார் பிரபாகர், சிவில் சப்ளை தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேல்முறையீடு

இது குறித்து அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறும் போது, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 14 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இந்த முகாமில் என்ன காரணத்துக்காக மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். சிலருக்கு வங்கி கணக்கில் பிரச்சினை உள்ளது. சிலர் பெற்றோர்களின் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்ததால் பிரச்சினை உள்ளது.

இ-சவை மையங்கள்

சிலர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி உள்ளனர். கூட்டுறவு வங்கியில் மத்திய கூட்டுறவு வங்கி கணக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. சிலர் தபால் நிலையங்களில் கணக்கு வைத்து உள்ளனர். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

இது போன்ற தவறுகளை எல்லாம் ஆன்லைன் மூலம் சரி செய்யும் பணிகள் முகாம் மூலம் நடக்கிறது. அனைத்து இ-சேவை மையங்களிலும் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்வதற்காக இ-சேவை மையங்களில் எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். ஆகையால் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்வதற்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...