சென்னை,
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கிறது என்றும் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.
அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!
பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.