சென்னை,
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தங்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் புதுச்சேரியில் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அந்த சின்னம் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு இரு தேர்தல்களில் பொது சின்னம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. எதிர்வரும் சட்டசபை தேர்தலும் இந்த சின்னத்தையே ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.