தமிழக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர்

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர் ஆவார்.

தினத்தந்தி

மன்னார்குடி,

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாட்டை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் .

கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன், சிவில் சர்வீஸ் பணியில் 1930-ம் ஆண்டு பணியாற்றியவர். அப்போது ஜாம்பியா நாட்டிற்கு அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு கோபாலனை அனுப்பியுள்ளது.

பின்னர் கோபாலன், அமெரிக்காவில் குடியேறி உள்ளார். கோபாலனுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்தான் இன்று அமெரிக்கா துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிசின் குலதெய்வ கோவில் பைங்காநாடு அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோவில் என அழைக்கப்படும் அய்யனார் கோவிலாகும். இந்த கோவிலுக்கு கமலா ஹாரிசின் குடும்பத்தினர் நன்கொடை வழங்கியுள்ளனர். அதற்கான கல்வெட்டும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.

அதில் கமலா ஹாரிசின் தாத்தா கோபாலன், கோவிலில் மடப்பள்ளி கட்ட அளித்த நன்கொடை விபரமும், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ள கமலா ஹாரிஸ், கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த விவரமும் கல்வெட்டில் இடம்பெற்று உள்ளது.

தமிழகத்தின் குக்கிராமத்தில் இருந்து சென்ற சந்ததியின் வாரிசான கமலா ஹாரிஸ், வல்லரசு நாடான அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு உயர்ந்திருப்பது துளசேந்திரபுரம் மற்றும் பைங்காநாடு கிராம மக்களுக்கு அளப்பரிய உற்சாகத்தையும், ஆனந்தத்தையும் தந்துள்ளதாக அந்த கிராம பொதுமக்கள் பெருமையுடன் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, கமலா ஹாரிஸால் எங்களது கிராமங்களுக்கு பெருமை ஏற்பட்டு உள்ளது. இதனால் எங்கள் கிராமத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அமெரிக்க துணை ஜனாதிபதி இங்கு வந்து சென்றால் தமிழகத்திற்கும், எங்கள் கிராமத்திற்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்