தூத்துக்குடி,
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தூத்துக் குடி தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகே மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அ.தி.மு.க.வினர் பதவியை தக்க வைத்துக்கொண்டால் போதும் என்று செயல்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய அரசு இந்தி திணிப்பு, நீட் தேர்வு கொண்டு வந்த போதும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்த போதும் அதனை ஏற்று வரவேற்கின்றனர். மத்திய அரசை எதிர்த்து எழக்கூடிய முதல் குரல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குரல்தான்.
மத்திய அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப் பதாக கூறியது. அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக கூறினார்கள். எதையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத அரசாக மத்திய அரசு உள்ளது. அவர்களுக்கு அடிமைகளாக அ.தி.மு.க அரசு உள்ளது. 2 பேரும் போட்டி போட்டுக்கொண்டு நாட்டை நாசமாக்கி வருகிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாத்தான்குளம் சம்பவம் ஆகியவற்றை மூடி மறைக்க துடிக் கும் முதல்-அமைச்சர்தான் தற்போது உள்ள முதல்-அமைச்சர். மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து கொண்டு இருப்பவர்கள் தான் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
கியாஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று சிந்திக்காமல் தொடர்ந்து விலையை உயர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. ஆட்சி உருவாகும். அந்த ஆட்சி தலையாட்டி பொம்மையாக இருக்காது என்று அவர் கூறினார்.
சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான புலவர் இந்திரகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை ஆர்.கே.நகர் வைத்தியநாதன் பாலம் அருகே தி.மு.க. மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட பெண்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் நங்கநல்லூரில் மாவட்ட அமைப்பாளர் கிரிஜா பெருமாள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆவடியில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் சா.மு. நாசர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.