காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
பெரிய கண்மாய்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கம்பிக்குடி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த ஆண்டு இந்த பகுதியில் மழை பெய்யாததால் கண்மாய்கள் அனைத்தும் வறண்ட நிலையில் இருந்தது.
இந்தநிலையில் வைகை அணையில் இருந்து நிலையூர்-கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் பல வருடங்களாக நிரம்பாத கம்பிக்குடி பெரிய கண்மாய் சென்ற ஆண்டு முழுமையாக நிரம்பியது. இந்த ஆண்டு ஓரளவு நிரம்பியது. இதனால் இங்கு விவசாயம் முழுமையாக நடைபெற்றது.
மீன்பிடி திருவிழா
இந்தநிலையில் கம்பிக்குடி பெரியகண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிக பாசன நீர் நிலைகளை கொண்ட கம்பிக்குடி பெரிய கண்மாயில் மீன்களை வளர்ப்பதும், நீர் வற்றியதும் மீன்களை பொதுமக்கள் பிடிப்பது என்பது காலங்காலமாக நடந்து வந்துள்ளது.
பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் மந்திரிஓடை, சின்ன கம்பிக்குடி, பெரிய கம்பிக்குடி, ஆவியூர், ஆலங்குளம், கள்ளங்குளம், முஷ்டக்குறிச்சி, அச்சங்குளம், புல்லூர் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கம்பிக்குடி கிராமத்தில் உள்ள வாழவந்த அம்மன் கோவிலில் பொதுமக்கள் ஒன்றுகூடி சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். அதில் ஒவ்வொருவரின் வலையிலும் கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, தேன் கெளுத்தி ஆகிய மீன்கள் கிடைத்தன. எதிர்பார்த்த அளவு மீன் கிடைக்காததால் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.