தமிழக செய்திகள்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கன்னியாகுமரி வந்தார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார்.

அங்கிருந்து மோடி கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.

அங்குள்ள கூட்ட அரங்கிற்கு சென்ற அவர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, கவர்னரின் தனி செயலாளர் ராஜகோபால், முதன்மை செயலாளர்கள் ககன்தீப்சிங் பெடி, டி.கே.ராமச்சந்திரன், ராஜேந்திரகுமார், ஹர்மந்தர்சிங், குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒகி புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது, புயல் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கி மனுவை எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் அளித்தார்.

அதில், புயல் பாதிப்புக்கு உள்ளான குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும், புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு, நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும்; சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், இனி சென்னைக்கு வெள்ளத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாதவாறு நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் 4,047 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும். ஆக மொத்தம், ஒகி புயல் பாதிப்புகள், சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகளுக்கென 9,302 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அந்த கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டுக்கொண்டார்.

மீனவர்களுடன் சந்திப்பு

அதன்பிறகு அவர், புயலால் பாதித்த மீனவர்களை சந்தித்தார். நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, முள்ளூர்துறை, குளச்சல், மேல்மிடாலம், மிடாலம், மணக்குடி ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து வந்திருந்த பங்குத்தந்தையர்கள், மீனவர்கள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் என 34 பேர் மோடியை சந்தித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூட்ட அரங்கின் மேடையை விட்டு இறங்கி வந்து, மீனவர்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் மத்தியில் நின்றவாறே சுமார் 10 நிமிடம் ஒகி புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று புயலால் மாயமாகி, கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தங்களது உறவினர்களை மீட்டு கரை சேர்க்க வேண்டும் என்று கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோளை பிரதமரிடம் தெரிவித்தனர். அதை ஆங்கிலத்தில் அதிகாரிகளும், பங்குத்தந்தையர்களும் மொழிபெயர்த்து கூறினர்.

மீனவர்கள் சார்பில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மீனவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்கள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்த பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

புயலின் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை மீட்க கப்பல்படையும், கடலோர காவல்படையும் மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடரும். இதனை நாங்கள் நிறுத்தமாட்டோம். மீனவர்கள் அனைவரும் கரைசேரும் வரை இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

ஒகி புயல் சேத விவர அறிக்கைகளை பெற்ற பிறகு தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு அதே அரங்கில், விவசாய பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்தார். மொத்தம் 32 பேர் இந்த சந்திப்பின்போது பங்கேற்றனர். அவர்களிடம் பிரதமர் புயல் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், பா.ஜனதா நிர்வாகிகளை சந்தித்து சிறிது நேரம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா மாநில துணை தலைவர் எம்.ஆர்.காந்தி மற்றும் குமரி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்