தமிழக செய்திகள்

கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் புயல்-மழையால் கடும் சேதம்

புயல்-மழையால் கடும் சேதம். ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. மின்சார ‘சப்ளை’ துண்டிக்கப்பட்டது. தொடர் மழைக்கு 5 பேர் பலி ஆனார்கள்.

நாகர்கோவில்,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு ஒகி என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல்-மழை கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சூறாவளி காற்று வீசத் தொடங்கியது. பலத்த மழையும் கொட்டியது. சுழன்று வீசிய காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் இருந்தே மின்தடை ஏற்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

விடிய விடிய கொட்டிய மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. நாகர்கோவில் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து தடைபட்டது. பல இடங்களில் செல்போன் கோபுரங்கள் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சூறைக்காற்று மற்றும் கனமழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பணிக்கு செல்லவில்லை.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் ஒரு மரம் அரசு பஸ் மீது விழுந்ததால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனால் தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் பஸ்கள் திருப்பி விடப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து பெரும்பாலான கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ரெயில் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சாலைகளில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர், போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சில இடங்களில் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழும்பின. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மீனவ கிராமங்களில் ஓடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் புயல், மழைக்கு நேற்று 5 பேர் பலி ஆனார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கார்த்திகைவடலியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 45) என்பவர் தென்னை மரம் முறிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

இதுபோல் பளுகல் பகுதியில் வீட்டின் மீது மரம் சாய்ந்ததில் தூங்கிக்கொண்டிருந்த அலெக்சாண்டர் (60) என்பவர் பரிதாபமாக இறந்தார். மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (60) என்பவர் வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்தபோது அவர் மீது மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பால்கிணற்றான் விளையை சேர்ந்த குமரேசன் என்பவரும் நேற்று மரம் விழுந்து பலி ஆனார்.

மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 70 வீரர்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
பலத்த மழையின் காரணமாக நெல்லை, பாளையங்கோட்டையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே சாலையில் 2 மரங்கள் வேறோரு சாய்ந்தன. செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே மரம் சாய்ந்ததில் மின்கம்பி அறுந்ததால், மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் ஒரு வீட்டின் மீதும் மரம் சாய்ந்தது.

ஆரியங்காவு-தென்மலை ரோட்டிலும் மற்றும் குற்றாலத்தில் பராசக்தி மகளிர் கல்லூரி அருகிலும் மரங்கள் சாய்ந்தன. ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம் பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் வாழை மரங்களும் சாய்ந்தன.

ஆழ்வார்குறிச்சியில் மரம் முறிந்து விழுந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிர் இழந்தார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

களக்காடு பகுதியில் உப்பாறு, பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலும் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கனமழையின் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர் வர தொடங்கி உள்ளது. காயல்பட்டினம், உவரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
பலத்த மழையின் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. கொடைக்கானலில் மரங்கள் சாய்ந்ததில் 21 மின்கம்பங்கள், 4 டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டது. மரங்கள் சாய்ந்ததன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. காற்றுடன் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் விடுதிகளிலேயே முடங்கினர்.

திண்டுக்கல் அருகே சிறுமலை மலைப்பாதையில் பாறை உருண்டு விழுந்ததால் திண்டுக்கல்-சிறுமலை பஸ் போக்குவரத்து தடைபட்டது.
பழனியில் 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் சாய்ந்தது.

தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. வெள்ளிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, பாரஸ்ட் கேட், லவ்டேல் பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. கோத்தகிரியிலும் ஒரு மரம் சாய்ந்தது.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறையில் பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது.

நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நாகை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ராம நாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து உள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்