கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை - வைகோ அறிக்கை

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு உரிமை இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்துவதை தடுக்க கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி தெற்கு வெள்ளாறு வைகை குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 21-ல் அடிக்கல் நாட்டினார். சுமார் 14,400 கோடி ரூபாய் செலவில் ஆறாயிரம் கன அடி மிகை நீரை வறட்சி மிக்க தென் மாவட்டங்களுக்கு மடைமாற்றுவதற்காக இத்திட்டத்தை சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் இது குறித்து கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி பேசும்போது, காவிரி ஆற்றின் மிகை நீரைப் பயன்படுத்துவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டம் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்போம் என்று தெரிவித்து இருக்கிறார்.

கர்நாடகா பா.ஜ.க. அரசின் முதல்-அமைச்சர் எடியூரப்பா, தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதை தடுத்து நிறுத்துவோம் என்று கொக்கரித்துள்ளார்.

அதைப்போலவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, தமிழக அரசு செயல்படுத்த இருக்கும் ஆறுகள் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து, கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் பங்குக்குத் தெரிவித்து இருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, வழக்கமான மழை ஆண்டில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. நீரை பிலிகுண்டுலு நீர் அளவை மையத்தில் உறுதி செய்வது மட்டுமே கர்நாடக அரசின் வேலையாகும். தமிழகத்திற்கு வரும் காவிரி நீரை வடிநிலப் பகுதியான தமிழகம் தக்க வழியில் பயன்படுத்துவதற்கு கர்நாடக அரசின் அனுமதி தேவை இல்லை.

2007-ல் நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு அளித்தபோது, பாசனப் பரப்பு 18.8 லட்சம் ஏக்கராக உயர்ந்துவிட்டது. அதன்பின்னர் தற்போது 13 ஆண்டுகளில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு 21 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது. இதனை இன்னும் ஐந்து ஆண்டுகளில் 30 லட்சம் ஏக்கராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, அதில் ஒரு பகுதியாக மேகதாது அணைத்திட்டத்தை உருவாக்கி உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் நிலை என்ன? 1971-ல் காவிரிப் படுகைப் பகுதிகளில் 25.03 ஏக்கராக இருந்த பாசனப் பரப்பு, தற்போது 16 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு முறைப்படி அளிக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்து வரும் கர்நாடக மாநிலம், காவிரியின் மிகை நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக அரசு இதனைத் திட்டவட்டமாக உச்சநீதிமன்றத்திலும், மத்திய அரசிற்கும் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்று வைகோ+ கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்