சென்னை
தமிழக சட்டசபையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சட்டசபையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் பதில் அளித்து பேசும் போது ஆவின் பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது ஆனாலும் உற்பத்தி, விற்பனையை பெருக்கி சரிசெய்யப்படும் என கூறினார்.
வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் சட்டசபையில் பேசும் போது தென்காசியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , சித்தா பல்கலைக்கழகம், உழவர்சந்தைகளை ஏற்படுத்த வேண்டும்; புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வருவாய் கோட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ், ''மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் அவர், திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பினார்.
தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி அமைந்துள்ளதால் தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் திருச்சிக்கு குறைந்த மணிநேர செலவில் சாலை மார்க்கத்திலும், ரெயில் மற்றும் விமானம் மூலம் வந்து செல்ல முடியும் எனவும் இனிகோ இருதயராஜ் கூறினார்.