சென்னை,
தரணியில் மூத்த, தனிப்பெரும் தமிழினத்தின் தகத்தகாய சூரியனாம் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன்-3. இந்த ஆண்டு 97-வது பிறந்தநாளாகும். இன்னும் 3 ஆண்டுகளில் அவரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்தநாளை நாம் கொண்டாடுவது என்பது, அவரை போற்றிப் பாராட்டுவதற்காக மட்டுமல்ல. அவர் செய்து வைத்த அளப்பரிய சாதனைகளுக்கு நாம் செலுத்தும் நன்றியின் காணிக்கையாகத்தான் அத்தகைய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடி, குதூகலம் கொண்டோம்.
முதுமை நிலையில், வீட்டில் ஓய்வெடுத்த காலத்தில் கூட அவரது இதயம், இம் மக்களுக்காகத்தான் துடித்தது. தமிழ்நாட்டு மக்களுக்காகவே சிந்தித்து, தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்து, இயங்கிய அந்த இணையிலாத் தலைவரின் பிறந்தநாளை, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டாடுவதே பொருத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கும்.
கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்று பரவி பெரும் பரிதவிப்பையும், இன்னலையும் மக்கள் சந்தித்து வரும் காலம் இது. ஒருபக்கம் நோய்த்தொற்று குறித்த பயமும், இன்னொரு பக்கம் பொது முடக்கம் காரணமாக வாழ்க்கையும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு மக்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களும், காணக் கண் கூசத்தக்க இன்றைய மோசமான காட்சிகளாக இருக்கின்றன.நோய்த்தொற்று குறித்து அரசாங்கத்துக்கு காலத்தே எச்சரிக்கை விடுத்து அறிக்கைகள் விட்டதோடு தனது கடமை முடிந்ததாக தி.மு.க. இருந்துவிடவில்லை.
மக்களின் அச்சம் போக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தைச் செய்தோம். முககவசம், கிருமிநாசினி போன்ற பொருட்களையும் வழங்கினோம். இதன் அடுத்தகட்டமாக அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கினோம். பல இடங்களில் நிதி உதவியும் செய்தோம். மேலும், உணவுகள் தயாரித்துப் பல லட்சம் பேரின் பசியை ஆற்றினோம். கொரோனாவுக்கான ஊரடங்கு காலம் முதல் இதனைத் தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் களத்தில் நின்று மக்களுக்கு காவல் அரணாக, உதவிடும் கரங்களாக இருந்தார்கள். இருந்தும் வருகிறார்கள்.
கருணாநிதி இருந்திருந்தால், இதை பார்த்து பரவசம் கொண்டிருப்பார். இவற்றைச் செய்யவே இன்முகத்துடன் கட்டளையிட்டிருப்பார். அவரே பல இடங்களில் பொருட்கள் வழங்க ஓடோடி வந்திருப்பார். அத்தகைய தலைவரின் பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதியிலும் இதுபோன்ற நல்ல உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு எனது அன்பான வேண்டுகோளாக வைக்கிறேன்.
கொரோனா விழிப்புணர்வு பிரசாரம், முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்குதல், அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருட்கள் வழங்குதல், காய்கறிகள் வழங்குதல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி செய்தல், அபலைகள், வீடற்றவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளித்தல், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தல் என, நம்மால் முடிந்த அளவிலான பணிகளை கருணாநிதியின் பிறந்தநாளில் செய்வதன் மூலமாக, அந்தச் செந்தமிழர் தலைவர், எங்கும் நிறைந்தும் வாழ்கிறார், எல்லோரையும் வாழ வைக்கிறார், வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிப்போம்.
ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் மட்டுமல்ல. அவர் பிறந்ததன் நோக்கங்களை, அவரது லட்சியங்களை, நாம் நம் இதயங்களில் ஏந்தி நிறைவேற்றிடவும், நிறைவேற்ற உறுதி கொள்ளவுமான நாள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.